Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

“ஆசியாவின் எதிர்காலம்” – குறித்த 26வது சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை

“கோவிட்நோய்த்தொற்றுக்குப் பிந்திய யுகத்தை வடிவமைத்தல்: உலகளாவிய மீட்பில் ஆசியாவின் பங்கு” குறித்த இந்த மதிப்புமிக்க சர்வதேச மாநாட்டில் இன்று உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாநாட்டிற்காக டோக்கியோ நகரில் நேரில் ஒன்றுகூடுவதை தற்போதைய சூழ்நிலைகள் தடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆயினும்கூட, இந்த கலப்பு முறையில் இந்த மாநாட்டைத் தொடர முடிவெடுத்ததற்காக எமது உபசரிப்பாளர் நிக்கேயை (Nikkei) நான் பாராட்டுகிறேன்.

பிரதமர் யோஷிஹிடே சுகா அவர்களுக்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையும் ஜப்பானும் பல தசாப்தங்களாக நீண்ட மற்றும் பயனுள்ள கூட்டாண்மையை அனுபவித்து வருகின்றன. வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை மிகவும் ஆர்வமாக உள்ளது.

ஆசியாவில் உள்ள நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதும், உலகளவில் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தற்போதைய தொற்றுநோய் நிலைமையையும் அதன் விளைவுகளையும் கருத்தில் கொண்டு கடந்த காலங்களில் இருந்ததை விட இன்று மிக முக்கியமானது.

கோவிட் 19 உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இது பல மில்லியன் உயிர்களை காவுகொண்டு, நூறு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டின் பெரும்பகுதிகளில் வைரஸ் பரவுவதைத் இலங்கையால் தடுக்க முடிந்தது என்றாலும், தொற்றுநோயின் தாக்கம் பேரழிவு தரக்கூடியதாகும்.

2020 ஆம் ஆண்டில் எமது பொருளாதாரம் 3.6 சதவிகிதம் சுருங்கியது. இலங்கை வரலாற்று ரீதியாக அந்நிய செலாவணி வருமானத்திற்கான சில முக்கிய துறைகளை நம்பியுள்ளது. தேயிலை, இரப்பர், தென்னை மற்றும் வாசனை திரவியங்கள் ஏற்றுமதி, ஆடைகள் ஏற்றுமதி; இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணம் மற்றும் சுற்றுலா ஆகியவை இதில் அடங்கும். இந்த துறைகள் அனைத்தும் குறிப்பாக கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பெரும்பாலான துறைகள் 2019 க்கு முந்தைய நிலைக்கு திரும்பினாலும், சுற்றுலாத் துறையால் அது சாத்தியப்படவில்லை. சுற்றுலா என்பது எமது பொருளாதாரத்தில் அதிக அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய ஒன்றாகும், மேலும் சுமார் 3 மில்லியன் மக்கள் அதனையே சார்ந்திருக்கின்றனர். உயிர் பாதுகாப்பு குமிழ்கள் (bio-safety bubbles) மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகளுக்கான குறைந்த தனிமைப்படுத்தல் தேவைப்பாடுகள் ஆகியவற்றுடன் 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், உலகளவில் தொற்றுநோய் நிலைமை நீடிக்கும் வரை சுற்றுலா துறை தொடர்ந்து பாதிக்கப்படும்.

அண்மைய மாதங்களில், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் கோவிட் 19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. இலங்கையிலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த புதிய பரவலை விரைவாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான நீண்டகால இடையூறு ஏற்படாமலும் இருக்கும் வகையில் கட்டுப்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம். எமது கடந்த கால அனுபவங்களிலிருந்தும் பிற நாடுகளின் பகிரப்பட்ட அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களைப் பயன்படுத்துவது அவ்வாறு செய்வதில் முக்கியமானதாக இருக்கும்.

சுகாதார அமைப்பில் தொழில்நுட்ப திறன் மற்றும் தயார்நிலை இல்லாமை பெரும்பாலான நாடுகள் எதிர்கொள்ளும் சவாலாகும். எவ்வாறாயினும், இந்த திறனை வலுப்படுத்த தொற்றுநோய் காலப்பகுதியில் அதிகரித்துள்ள சர்வதேச ஒத்துழைப்பு ஊக்கமளிப்பதாக உள்ளது.

ஆசியாவிலும் பிராந்தியத்திற்கு வெளியிலிருந்தும் பல இருதரப்பு மற்றும் பலதரப்பு நன்கொடையாளர்களின் தாராள உதவியால் இலங்கை பயனடைந்துள்ளது. இந்த உதவி தொற்றுநோயையும் அதன் விளைவுகளையும் கையாள்வதற்கான எமது திறனை பெரிதும் பலப்படுத்தியுள்ளது.

இறுதியில், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களுக்கான ஒரே நீண்டகால தீர்வு தடுப்பூசி ஏற்றுதல் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, கடுமையான வழங்கல் மற்றும் வள கட்டுப்பாடுகள் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளன.

தொற்றுநோயானது தேசிய எல்லைகளை மதிக்கவில்லை. வைரஸ் உலகில் எங்கும் பரிசோதிக்கப்படாமல் பரவ அனுமதிக்கப்பட்டால், ஆபத்தான விகாரங்கள் வெளிவரக்கூடும், இது ஏற்கனவே வேறு இடங்களில் தடுப்பூசி மூலம் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தை அச்சுறுத்துகிறது. உற்பத்தி திறன் கணிசமாக மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் குறுகிய காலத்தில் தடுப்பூசிகளை உலகளவில் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விநியோக தடைகளை விரைவில் வெற்றிகொள்ள வேண்டும். இதைச் செய்தால்தான் நாம் இந்த பேரழிவிற்கு ஒரு முடிவைக் காண முடியும்.

கோவிட் 19 தொற்றுநோய் முன்னெப்போதுமில்லாத வகையில் சவால்களை உருவாக்கியுள்ளது, அதற்காக எந்த தேசமும் தயாராக இல்லை.

இருப்பினும், அதன் விளைவுகளைப் சமாளிப்பதில், சில நேர்மறையான விடயங்களும் வெளிப்பட்டுள்ளன.

இலங்கையில், மிகக் குறுகிய காலத்தில் அறிவை மையமாகக் கொண்ட தொழிலாளர்களுக்கு தொலைதூர வேலை இயல்பாக்கப்பட்டுள்ளதுடன், கல்வித் துறை இனைய வழிகளுக்கு மாறியுள்ளது. இது விரைவான திறன் மேம்பாடு மற்றும் நாடு முழுவதும் டிஜிட்டல் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டதாகும். ஃபைபர் ஒப்டிக் மற்றும் கம்பித்தொடர்பற்ற வலையமைப்புகளின் விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் மிக தொலைதூர பகுதிகள் கூட உயர்தர இணைய இணைப்பைப் பெற்றுள்ளன.

தொற்றுநோய் எமது பொது சுகாதார அமைப்பு மற்றும் சுகாதார உட்கட்டமைப்பின் திறனையும் ஆழத்தையும் பரிசோதித்தது, நாம் முன்னேறும்போது தற்போதைய திறன் விருத்தி பெரிதும் வலுப்பெறும்.

சர்வதேச அளவில், தொற்றுநோயிலிருந்து உருவான ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான வளர்ச்சியானது, பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் நாடுகளிடையே உருவாகியிருக்கும் ஒற்றுமை மற்றும் தாராள மனப்பான்மையாகும். உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையேயான அறிவு பகிர்வு மற்றும் ஆதரவு ஊக்கமளிப்பதாக உள்ளது என்பதுடன் இது எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.

மற்றொரு சாதகமான விளைவு பல துறைகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் செய்யப்பட்ட வேகமாகும். மருத்துவத்திலும் மருந்தாக்கத் தொழிற் துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டன, இது புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்ட வேகத்திலும் புதிய சிகிச்சை நெறிமுறைகளை வகுப்பதிலும் பிரதிபலித்தது. இவை மனிதகுலத்தின் எதிர்காலத்தில் பரிமாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய மாற்றங்கள் ஆசியாவில் எமக்கு மிகவும் முக்கியம். பல ஆசிய நாடுகளின் அபிவிருத்தி உந்துதல் அண்மைய தசாப்தங்களில் மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. ஆசியாவின் இளைய தலைமுறையினர் முன்பை விட இப்போது நன்கு படித்தவர்களாகவும், தொழில்நுட்ப ஆர்வலர்களாகவும் உள்ளனர். விரைவான டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய உலகளாவிய மாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும், இப்பிராந்தியம் எதிர்காலத்தை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவுவதற்கும் அவர்கள் நன்கு தகுதிபெற்றுள்ளனர்.

ஆசியாவின் தலைவர்களாகிய நாம் இந்த போக்குகளை உள்நாட்டில் மட்டுமல்லாமல் பிராந்தியத்திலும் ஊக்குவிக்க வேண்டும். ஆசிய நாடுகள் தொடர்ந்து ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும், வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும், மேலும் ஒரு பிராந்திய கட்டமைப்பு வடிவமைப்பை உருவாக்க வேண்டும், இது அனைத்து நாடுகளும் தங்கள் பொருளாதாரங்களை ஒரு சிறந்த, அதிக முற்போக்கான மற்றும் நிலையான நிலைப்பாட்டில் மீண்டும் உருவாக்க உதவுகிறது.

ஆசியான், பிம்ஸ்டெக் மற்றும் சார்க் போன்ற பிராந்திய அமைப்புகள் இதை ஆதரிப்பதற்காக நன்கு வடிவமைக்கப்பட்ட, நடைமுறைசாத்தியமான, ஒருங்கிணைந்த பணித் திட்டங்களுடன் புத்துயிர் பெற வேண்டும். அதிகரித்த பிராந்தியத்திற்கிடையிலான வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், ஆசியாவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இடையிலான வர்த்தகமும் முக்கியமானது.

இந்து சமுத்திரத்தின் மையத்தில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவு என்ற வகையில், இலங்கை பழங்காலத்திலிருந்தே கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைக்கும் மையமாக இருந்து வருகிறது. இன்று, இலங்கையில் மிகச்சிறந்த துறைமுக உட்கட்டமைப்பு உள்ளது. அதன் மூலம் கப்பல் போக்குவரத்தை எளிதாக்கவும் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு கூட உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்கவும் முடியும். இந்த பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பைப் பேணுவதற்கும், அனைத்து நாடுகளின் சார்பாக முக்கியமான கடல் தொடர்புகளைப் பாதுகாக்கவும் நாங்கள் பெரிதும் பங்களிக்கின்றோம்.

எங்கள் அனைத்து பங்காளர்களுடனான நட்புறவு, கூட்டுறவு தொடர்புகளின் அடிப்படையில் எமது தேசிய நலன்களைப் பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் நடுநிலை வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். எங்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும், எமது மக்களின் நல்வாழ்வை ஒரு நிலையான மற்றும் சமமான முறையில் மேம்படுத்துவதற்கும் எங்கள் மூலோபாய அமைவிடத்தின் நன்மைகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அனைத்து நாடுகளுடனும், குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் எங்கள் பங்காளர் நாடுகளுடனும் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் அடிப்படையில் எங்கள் இருதரப்பு உறவுகளை கணிசமாக வலுப்படுத்த நாங்கள் முயற்சிக்கின்றோம்.

இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்றாலும், பல சமூக அபிவிருத்தி குறியீடுகளில் இலங்கை ஒப்பீட்டளவில் உயர்ந்த இடத்தில் உள்ளது. நாடு ஒரு வலுவான பொது சுகாதார முறைமையைக் கொண்டுள்ளதுடன், மூன்றாம் நிலை வரை இலவச கல்வியை வழங்குகிறது. எங்களிடம் நன்கு படித்த, அதிக திறமையான, கடின உழைப்பு கொண்ட மற்றும் திறமையான தொழிற் படையொன்று உள்ளது.

விமானம் மூலம் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் முக்கிய உலகளாவிய மையங்களுடன் தொடர்புபடக் கூடிய தெற்காசியாவில் மிகவும் இணைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை ஒன்றாகும், வர்த்தக தலைநகரான கொழும்பு இப்பிராந்தியத்தின் மிக அழகான நகரங்களில் ஒன்றாகும், மேலும் இது வழங்கும் வாழ்க்கைத் தரத்தைப் பொருத்த வரை தெற்காசியாவின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாகும்.

இந்த சூழலில், கொழும்பு வர்த்தக மாவட்டத்தை 269 ஹெக்டேர் மீட்கப்பட்ட நிலத்திற்கு விரிவுபடுத்தும் புதிய அபிவிருத்தி சர்வதேச வர்த்தகங்களுக்கு ஒரு அற்புதமான புதிய வாய்ப்பை  வழங்குகிறது. துறைமுக நகரம் தெற்காசியாவிற்கு ஒரு நுழைவாயிலாக இருக்கும். இது ஒரு சர்வதேச நிதி மையம், ஒரு சிறு கலத் துறைமுகம் (மெரினா) மாவட்டம், சிறந்த குடியிருப்பு மற்றும் வர்த்தக வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு துடிப்பான புதிய நகரக் காட்சியை உருவாக்கும், இவை அனைத்தும் ஒரு வெப்பமண்டல கடற்கரை  சொர்க்கபுரியுடன் கூடியதாக இருக்கும்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான சூழலையும் துறைமுக நகரத்தில் வர்த்தகத்தை பெரிதும் எளிதாக்குவதையும் உறுதி செய்யும் புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பரந்த பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் வணிகங்களுக்கு விசேட நிலைகள் மற்றும் விலக்களிப்புகள் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்த முயற்சிகளிலிருந்தும், உலகின் மிக வேகமாக முன்னேறும் பிராந்தியங்களில் ஒன்றின் மையத்தில் உள்ள துறைமுக நகரத்தின் தனித்துவமான புவிசார் மூலோபாய நிலையிலிருந்தும் பெரிதும் பயனடைவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும் அனைத்து நாடுகளையும் தங்கள் வர்த்தகங்களை ஊக்குவிக்கவும், எதிர்காலத்தில் இந்த பிராந்தியத்திற்கு ஒரு முக்கிய சேவை மையமாக மாறும் ஒரு பகுதியின் பங்காளராக இருக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

விவசாயத் துறை எனது நாட்டுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது எமது பொருளாதாரத்திற்கு இன்றியமையாததாகவும் எமது மக்கள்தொகையில் கணிசமானவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் ஒன்றாகவும் உள்ளது. இலங்கை சிறந்த இயற்கை வளத்தினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதுடன், பலவகையான பயிர்களுக்கு தாயகமாக உள்ளது, இவற்றில் பல பெரிய ஏற்றுமதி திறன் கொண்ட முக்கிய உணவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

உயர் தொழில்நுட்ப விவசாயம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தக்கூடிய முதலீடுகளை ஊக்குவிக்க எனது அரசாங்கம் ஆர்வமாக உள்ளது, இது விளைச்சலை இயல்பாக மேம்படுத்தும் என்பதுடன் எங்கள் உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கும் மற்றும் அவற்றிலிருந்து அதிக ஏற்றுமதி வருவாயை கொண்டுவரும் வர்த்தகங்களுக்கு விவசாய தொழிற் துறைகளை உருவாக்க உதவுகிறது.

தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் இலங்கை இதேபோல் ஆர்வமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக எண்ணிக்கையிலான தகுதியும் அனுபவமும் வாய்ந்த திறமையான தொழில் வல்லுநர்கள் எங்களிடம் உள்ளனர். இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை மட்டங்களில் எங்களது தற்போதைய கல்வி சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் இந்தத் துறையில் எமது இளைஞர்களின் வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இலங்கையிலிருந்து செயல்பட உதவும் வகையில் மிகவும் வலுவான சூழலை உருவாக்க தனிப்பட்ட தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டம் உட்பட புதிய சட்டம் வகுக்கப்படுகிறது. இங்கு தலைமையிடமாக உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பூச்சிய வரிக் கொள்கையை ஏற்படுத்துவது உட்பட, அரசாங்கம் ஏற்கனவே இதற்கு ஆதரவாக பல ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பல உயர் தொழில்நுட்ப தொழில்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் இலங்கையில் ஏராளமாக உள்ளன. இந்த வளங்கள் தொடர்பாக பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்களை உருவாக்க முற்படும் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்க எனது அரசு தயாராக உள்ளது.

வளர்ந்து வரும் எமது தொழில்துறை தேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் கொள்கைக்கு ஏற்ப, காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மின் உற்பத்திக்கான முதலீடுகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அனைத்து நாடுகளிலிருந்தும் கௌரவ விருந்தினர்களாக வருகை தருவோரை இலங்கை நீண்ட காலமாக வரவேற்று வருகிறது. உலகளாவிய பயணம் மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில் இலங்கை அதன் தனித்துவமான இயற்கை அழகு, கலாசாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டு, பரவலாக எதிர்பார்க்கப்படும் பல துடிப்பான கவர்ச்சிகளைக் கொண்டுள்ளது.

எனவே சுற்றுலா துறையில் கோவிட் நோய்த் தொற்றுக்குப் பிந்தைய எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீட்டை அழைக்க நாங்கள் முயல்கிறோம். அதிக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை வழங்கும் ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவற்றில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இத்தகைய முதலீடுகள் வரவேற்று உபசரிக்கும் பண்புள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகான வெப்பமண்டல தீவு தேசமாக எமது பல்வகை பலங்களை மூலதனமாகக் கொண்ட தனித்துவமான அனுபவங்களை உருவாக்க வேண்டும்.

எங்கள் உயர் தகுதி வாய்ந்த, அனுபவம் வாய்ந்த, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் மற்றும் எங்கள் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளுடன், இலங்கை மருத்துவ சுற்றுலா துறையிலான முதலீடுகளுக்கும் மிகவும் தகுதியான நிலையில் உள்ளது. ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத் திட்டங்களுக்கான முதலீடுகளையும் நாங்கள் வரவேற்கிறோம், இது முழுமையான சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தும் இலங்கையின் வளமான மரபுரிமையை மேலும் ஊக்கப்படுத்தி தற்போதுள்ள எமது உலகத்தரம் வாய்ந்த வசதிகளை மேம்படுத்தும்.

முடிவாக, பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் “ஆசியாவின் எதிர்காலம்” பற்றி கலந்துரையாடும் இந்த இரண்டு நாள் மாநாடு சிந்தனையைத் தூண்டும் மிகவும் பயனுள்ள மாநாடாக அமைய வாழ்த்துகிறேன். உலகளவில் இயல்புநிலை திரும்பும்போது, மிகக் கிட்டிய எதிர்காலத்தில் உங்கள் அனைவரையும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்பதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

நன்றி.

நிக்கெய் மன்றத்திற்கான நடுவர் திரு கோ யமதாவின் கேள்விகள்

1: கடந்த மாதம், இலங்கைக்கு வருகை தந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கிற்கு நீங்கள் மிகவும் நட்புறவான செய்தியை தெரிவித்தீர்கள். இந்த வகையில், ஒரு தெற்காசிய தேசமாக, சீனா மற்றும் இந்தியாவுடனான உறவை எவ்வாறு சமநிலைப்படுத்துவீர்கள்? சீனாவுடன் பாதுகாப்பு உறவை நிறுவுவது பற்றி நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பல நூற்றாண்டுகளாக வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இந்தியாவுடனான எமது ஆழ்ந்த சமூக, கலாசார, மத, பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் நன்கு அறியப்பட்டவை. சீனாவுடனும் எங்களுக்கு பல வலுவான பிணைப்புகள் உள்ளன. இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் 64 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டன. இரப்பர்-அரிசி வர்த்தக ஒப்பந்தம் 1952 ஆம் ஆண்டுக்கு முன்பே கையெழுத்தானது.

இலங்கையில்  2009 வரை 30 வருட கால பயங்கரவாத முரண்பாடு இருந்து வந்த காரணத்தினால் அண்மைய தசாப்தங்களில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்பட்டது. இந்த மோதலை வெற்றிகொள்ள பல நாடுகள் இலங்கைக்கு அத்தியாவசிய ஆதரவை வழங்கின. இந்தியா பயிற்சி மற்றும் முக்கியமான தாக்குதல் அல்லாத உபகரணங்களை வழங்கியது. சீனா, பாக்கிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகியவை ஆயுத தளங்கள், வெடிமருந்துகள் போன்றவை உள்ளிட்ட ஆதரவை வழங்கின. உளவுத்துறை பகிர்வுக்கு பல நாடுகளும் எங்களுக்கு ஆதரவளித்தன.

மோதல் முடிந்தபின், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதலுக்கு பிந்தைய புனரமைப்புக்கு இலங்கைக்கு அவசர தேவைகள் இருந்தன. நாடு முழுவதும் விரைவான உட்கட்டமைப்பு மேம்பாடும் எங்களுக்கு தேவைப்பட்டது. அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட எங்கள் ரயில் மற்றும் வீதி வலையமைப்புகள், மற்றும் எங்கள் துறைமுக வசதிகள் விரிவாக்கம் தேவைப்பட்டது. இதுபோன்ற பல திட்டங்களுக்கு சலுகைக் கடன்களை வழங்குவதன் மூலம் சீனா இலங்கையை ஆதரித்தது. இது துரதிர்ஷ்டவசமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

சிலரால் ‘கடன் பொறி’ என்று அழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இலங்கையில் ஒரு தெற்கு துறைமுகத்திற்கான தேவை மிக நீண்ட காலமாக இருந்தது. வெவ்வேறு ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் பல தசாப்தங்களாக அந்த துறைமுகத்தை உருவாக்க முயன்றன. இருப்பினும், இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் மட்டுமே செயற்படுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக ரீதியாக சாத்தியமான திட்டமாகும். அதன் நிர்மாணத்தை உறுதி செய்வதற்காக கடன் வாங்கிய அமைப்பு இலங்கை துறைமுக அதிகார சபையாகும். இது ஒரு இலாபகரமான நிறுவனமாகும், மேலும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான சரியான திட்டத்தை அது கொண்டிருந்தது. உண்மையில், கடனின் முதல் தவணை முழுமையாக செலுத்தப்பட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு ‘கடன் பொறி’ அல்ல, ஆனால் இலங்கையின் துறைமுக உட்கட்டமைப்பிற்கு சாத்தியமான மாற்றத்தக்க பெறுமதி சேர்ப்பாகும்.

சீனாவுடனான எங்கள் ஒத்துழைப்பு எமது ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் வர்த்தகப் பாதைகளுக்கு இணையாக உள்ளது. பல நாடுகளைப் போலவே சீனாவும் இலங்கைக்கு ஒரு முக்கிய முதலீட்டு பங்காளியாக இருந்து வருகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில், எமது அபிவிருத்தி அபிலாஷைகளை விரைவாகக் கண்காணிக்கவும், எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அனைத்து பங்காளர் நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை விரும்புகிறது. ஆசிய நாடுகள் மற்றும் தொலைதூர நாடுகளுடனான எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த எனது அரசு ஆர்வமாக உள்ளது.

உலக அதிகார போட்டிகள் மற்றும் பிராந்திய சக்தி இயக்கவியல் பற்றி நாம் அறிந்திருக்கும் நிலையில், எமது வெளியுறவுக் கொள்கை நடுநிலையானது. இந்தியாவை எங்கள் நெருங்கிய அண்டை நாடாகவும், நீண்டகால நண்பராகவும் நாங்கள் கருதுகிறோம், அவர்களின் பாதுகாப்பு கரிசனைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்க இலங்கையைப் பயன்படுத்த யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அனைத்து நாடுகளின் நலனுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்தியா மற்றும் அனைத்து பிராந்திய பங்காளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம்.

Related posts

Leave a Comment