Latest | சமீபத்தியது 

கொழும்பு துறைமுக நகரம் உள்ளூர், உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு….

கொழும்பு துறைமுக நகரம் உள்ளூர் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையில் புத்தம் புதிதாக கடலிலிருந்து பெறப்பட்ட நிலமான கொழும்பு துறைமுக நகரம், “தெற்காசியாவிற்கான நுழைவாயில்” என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இன்று (20) முதல் உத்தியோகபூர்வமாக நாட்டின் முதலாவது சேவை சார்ந்த விசேட பொருளாதார வலயமாக மாறியுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் எடுத்த சரியான மற்றும் மூலோபாய முடிவை இச்செயற்திட்ட நிறுவனமான CHEC Port City Colombo இன் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ஜியாங் கௌலியாங் அவர்கள் வரவேற்றுள்ளார். செயற்திட்ட நிறுவனம் இந்த சட்டமூலத்தின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமையானது தேவையான முற்போக்கான கொள்கை சூழலையும், கொழும்பு துறைமுக நகரத்திற்கு மிகவும் தேவைப்படும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதிலும், சேவைகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதிலும் ஊக்கமளிக்கும் வினையூக்கியாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த வணிகச் செயற்பாடுகளை எளிதாக்கும் என்று நம்புவதாகவும் திரு. கௌலியாங் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை பாராளுமன்றம், இன்று (20), கொழும்பு துறைமுக நகரத்தை தெற்காசியாவின் முக்கிய உலகளாவிய நிதி மற்றும் சேவை மையமாக மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமூலமானது ஒரு ஸ்திரமான கொள்கை சூழலை வழங்குவதுடன், உலகளாவிய ஒப்பீட்டளவில் போட்டித்திறன்மிக்க ஊக்கத்தொகைகளுடன் திறமையான நிர்வாக செயல்முறைகளின் பக்கபலமும் கிடைக்கப்பெறுகின்றது. எனவே, சர்வதேச நிறுவனங்களையும் உள்ளூர் நிறுவனங்களையும் தங்கள் வணிகங்களை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்கும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அடைவதற்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கொழும்பு துறைமுக நரகம் அழைக்கிறது.

புதிய சட்ட விதிகளின் கீழ், கொழும்பு துறைமுக நகரம் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தையும் கையாள்வதற்கான சர்வதேச வணிக மற்றும் பன்முக சேவை விசேட பொருளாதார வலயமாக மாறும். துபாய் மற்றும் சிங்கப்பூர் இடையேயான இடைவெளியைக் குறைத்து, கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயம் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான மையமாக மாறும் என்று உலகளாவிய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கொழும்பின் முதலாவது இடைமுக நிர்மாண அபிவிருத்திச் செயற்திட்டமான கொழும்பு சர்வதேச நிதி மைய (Colombo International Financial Centre – CIFC) செயற்திட்டத்திற்காக CHEC மற்றும் இலங்கையின் Browns Investments இடையில் கடந்த ஆண்டின் கடைசிப்பகுதியில் 1 பில்லியன் டொலர் தொகை கூட்டு முயற்சி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

கொழும்பு துறைமுக நகரத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான யமுனா ஜெயரத்ன அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “ஹொங்கொங் மற்றும் துபாய் போன்ற சிறப்பாக நிலைபெற்றுள்ள மற்றும் முதிர்ச்சியான சேவை மையங்களுடன் ஒப்பிடுகையில், வியாபாரம் செய்வதற்கான செலவில் இலங்கை ஏற்கனவே 70% முதல் 80% வரையான அனுகூலத்தைக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை இந்த செலவு அனுகூலத்தை மேலும் மேம்படுத்த உதவும், ஆனாலும் மிக முக்கியமாக முதலீட்டாளர்களின் சிரமங்களான திறமையான மற்றும் சரியான நேரத்தில் பிணக்கு தீர்க்கும் மற்றும் ஒப்புதல் அங்கீகாரங்களின் அடிப்படையில் நிர்வாக செயல்திறன் போன்றவற்றை நிவர்த்தி செய்ய உதவுகிறது. இது வணிகத்தை மேம்படுத்துவதில் எளிதானது என்பதுடன், செலவு அனுகூலங்கள், புவியியல் அமைவிடம் மற்றும் இலங்கையில் கிடைக்கப்பெறும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுடன் இணைந்து முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஈர்க்கின்ற பெறுமான முன்மொழிவை உருவாக்குவதற்கான முதல் படியாக செயல்படும். இலங்கையின் இயற்கை அழகால் சூழப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தினுள் நிலைபேண்தகு கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற கலைநயம்மிக்க உள்கட்டமைப்பு, எந்தவொரு உலகத்தரம் வாய்ந்த நவீன பெருநகரங்களுடனும் போட்டியிட தேவையான ஒரு விரும்பத்தகு கட்டமைப்பை வழங்குகிறது. எனவே, கொழும்பு துறைமுக நகரம் நாட்டிற்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு ஒரு ஊக்கியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

விசேட பொருளாதார வலய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தனது விழிப்புணர்வு பிரச்சாரமான ‘பெரும் நாடு’ (Loku Ratak) என்பதை உள்நாட்டில் ஆரம்பித்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்குள் அதன் உலகளாவிய பிரச்சாரத்திற்கும் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக திட்டங்கள் இன்னமும் நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றன.

கொழும்பு துறைமுக நகரம் பற்றிய விபரங்கள்

கொழும்பு துறைமுக நகரம் என்பது கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விரிவாக்கமாக மேற்கொள்ளப்படும் ஒரு புத்தம்புதிய நகர அபிவிருத்திச் செயற்திட்டமாகும். இதன் ஆரம்ப முதலீடு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையாக உள்ள நிலையில் இச்செயற்திட்டம் நிறைவடையும் போது மொத்த முதலீடு 15 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் உடமையாகவுள்ள 269 ஹெக்டேயர் பரப்பளவில், இது தற்போதைய மத்திய வர்த்தக மாவட்டத்துடன் இணைந்ததாக, கடலிலிருந்து நிலத்தை மீளப்பெறும் ஒரு செயற்திட்டமாகும். இதில் 178 ஹெக்டேயர் நிலப்பரப்பானது பூங்காக்கள், பசுமை நிறைந்த வீதிகள் போன்றவற்றுக்கும்இ 91 ஹெக்டேயர் நிலப்பரப்பானது A தர அலுவலகங்கள், சில்லறை விற்பனை மையங்கள், தனித்துவமான குடியிருப்பு நிர்மாண செயற்திட்டங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைந்த உல்லாச விடுதி, பொழுதுபோக்கு கப்பல்துறை, ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு வாழ்க்கை முறை செயற்திட்டங்கள் என அதிநவீன வடிவமைப்புக்களைக் கொண்டிருக்கும். இச்செயற்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனமான CHEC Port City Colombo நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அணியைத் தொடர்பு கொண்டு, எதிர்காலத்திற்கான தெற்காசியாவின் நகரமான மாறவுள்ள துறைமுக நரகத்தில் தற்போது கிடைக்கப்பெறும் தனித்துவமான முதலீட்டு வாய்ப்புக்களை நழுவ விடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுகின்றது.

Related posts

Leave a Comment