Latest | சமீபத்தியது World | உலகம் 

“இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட பயோச்சார் உற்பத்தி” குறித்த இணைய அமர்வு….

இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள CSIR-கனிம மற்றும் மூலப்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் மணீஷ் குமார் அவர்களால் நடத்தப்பட்ட “இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட உர (பயோச்சார்) உற்பத்தி” குறித்த இணைய அமர்வு ஒன்றினை விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை பேரவையுடன் (SLCARP) இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் 09ஆம் திகதி நவம்பர் 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமர்வில் இலங்கையைச்சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 70 பேர் கலந்துகொண்டு உயிரிக் கழிவுப்பொருட்களை பயோச்சாராக மாற்றி இயற்கை விவசாயத்துக்காக பயன்படுத்துவது குறித்த விடயங்களில் அவதானம் செலுத்தியிருந்தனர்.SLCARP தலைவர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க அவர்கள் தனது அறிமுக உரையில், இலங்கை அரசாங்கம் இயற்கை விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் இந்த செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.இதேவேளை, இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகராலய தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவின் பிரதானியான டாக்டர் சுஷில் குமார் அவர்கள், இந்திய இலங்கை பன்முக உறவில் விவசாயம் மிகமுக்கியமான வகிபாகத்தைக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். SLCARP மற்றும் விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய பேரவை (ICAR) ஆகியவை கைச்சாத்திட்ட செயல்திட்டத்துக்கு அமைவாகவே இவ்வாறான ஆராய்ச்சி மற்றும் அறிவு சார்ந்த ஒத்துழைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் காமினி சமரசிங்ஹ, விவசாயத்துறை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சாமந்தி வாசல, மேலதிக வனப்பாதுகாப்பாளர் டாக்டர் தீபனி அலவத்துக்கொட, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தூதுவர். சுமித் நாகந்தல உள்ளிட்டோர் ஏனைய முக்கிய பிரதிநிதிகளாக இந்த செயலமர்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

Leave a Comment