Latest | சமீபத்தியது 

கையேந்தும் அவசியம் எமக்கில்லை : உறுதியான நிலைப்பாட்டில் சிறிலங்கா

சர்வதேச நாணய நிதியத்திடம் நீண்ட கால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லையெனவும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் பாதகமான நிலைமை ஏற்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal )தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரும் நாடு தற்போது நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிப்பதாகவும், எனினும் உண்மையில் அவ்வாறான எந்தவொரு நெருக்கடி நிலையும் நாட்டில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

“தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் நீண்டகால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செல்லும்போது பாதகமான நிலை ஏற்படும்.

ஒரு நாடாக நாம் பாதகமான நிலைக்கு செல்லக்கூடாது. எதிர்க்கட்சி கூறினாலும் அதனை நாம் செய்ய முடியாது. எதிர்க்கட்சி சில சமயங்களில் நாட்டிற்கு பாதகமான விடயங்களை செய்யக்கூறும். அதனை நம்பி நாம் ஏமாற்றமடையத் தேவையில்லை.

கடந்த ஆட்சியில் இவ்வாறு செயற்பட்டதால் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியும். பல்வேறு தரப்பினரும் இதனை நெருக்கடி நெருக்கடி என்று கூறினாலும் இங்கு உண்மையில் நெருக்கடி ஒன்று இல்லை.

தற்போதைய சூழலில் சகலரும் தமது வேலைத் திட்டங்களை மேற்கொண்டு செல்லக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது. சில சில சிறிய அளவிலான தடைகள் இருந்தாலும் அது நெருக்கடியை நோக்கி நகரவில்லை.

மிக முக்கியமாக சகலவிதமான அத்தியாவசிய பொருட்களையும் தற்போது இறக்குமதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

சகலரும் தமது கடமையை எவரும் பதற்றப்படாமல் தமது செயற்பாடுகளை பரபரப்பின்றி செய்து கொண்டுபோனால் அது ஒரு பிரச்சினையாக யாருக்கும் தெரியாது.

தற்போது ஏற்றுமதி வருமானம் அதிகரித்துக்கொண்டு செல்கிறது. அத்துடன் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்ற நிதியை புதிய சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment