Latest | சமீபத்தியது 

பகிரங்க விவாதத்திற்கான திகதியை ஏற்றுக்கொண்டுள்ள நசீர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனைப் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தமை தொடர்பில், அரச தொலைக்காட்சி ஒன்று குறித்த விவாதத்திற்கு திகதியிட்டு அதனை உறுதிப்படுத்துமாறு அனுப்பிய செய்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அதனை உறுதி செய்து பதிலனுப்பியுள்ளார்.

அவர் குறித்த பதில் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்பட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கூறிய கருத்து தொடர்பில் பகிரங்க விவாதம் ஒன்றிற்கு அவரை அழைத்திருந்தேன்.

அதற்கு அவரும் சம்மதித்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு (15) உங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் வட்சப் செய்தியில் விவாதத்திற்கான திகதியை இம்மாதம் 29ல் உறுதிப்படுத்துமாறு எம் இருவருக்கும் முகவரியிட்டு அனுப்பியிருந்தீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், மட்டக்களப்பு மாவட்ட காணி சம்பந்தமான விவாதத்தில் தாங்கள் இருவரும் தயாராக இருப்பதாக நாம் ஊடகம் வாயிலாக அறிகின்றோம்.

இந்த விவாத நிகழ்ச்சியை எங்களுடைய அரச தொலைக்காட்சியின் புதன்கிழமைகளில் இடம்பெறும் தீர்வு எனும் நிகழ்ச்சியில் நடாத்துவதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம். எதிர்வரும் 29ஆம் திகதி டிசம்பர் மாதம் உங்களுக்குப் பொருத்தமானதாக இருந்தால் அறியத்தந்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம் என அச்செய்தி அமைந்திருந்தது.

உங்களது தேசிய தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியான தீர்வினை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பல இலட்சக்கணக்கான தமிழ் பேசும் நேயர்கள் பார்வையிடுகின்றனர்.

எனவே எமது இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்திற்கு உங்களால் உத்தேசிக்கப்பட்ட திகதியில் என்னால் சமூகம் கொடுக்க முடியும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment