Latest | சமீபத்தியது 

தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து உலகிற்கு சிறந்த பாடம் புகட்டினார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற 2021 அரச நத்தார் விழாவில் அலரி மாளிகையிலிருந்து ஸும் தொழில்நுட்பம் ஊடாக இன்று (20) முற்பகல் கலந்து கொண்ட உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரச நத்தார் விழாவை முன்னிட்டு சமய அலுவல்கள் திணைக்களத்தினால் இரத்தினபுரி, கேகாலை மாவட்டத்திற்கான பல்லூடக ப்ரொஜெக்டர் மற்றும் திரை சப்ரகமுவ மாகாண கனிஷ்ட தேவாலயத்தின் கேகாலை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ரஞ்சன்மால் மொரேயஸ் அவர்களிடமும், இரத்தினபுரியில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 20 நூலக புத்தக தொகுதிகள் மற்றும் அறநெறி ஆசிரியர்களுக்கான 100 தர்ம உபதேச நூல்கள் இரத்தினபுரி தர்ம போதக பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் அமில அவர்களிடமும் அரச நத்தார் விழாவில் வைத்து பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டது.

கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பைபிள் போட்டியில் தேசிய மட்டத்திலும் 2021 நத்தார் தபால் முத்திரை சித்திரப் போட்டியிலும் வெற்றி ஈட்டிய மாணவ மாணவியருக்கு கேகாலை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ரஞ்சன்மால் மொராயஸ் அவர்கள் உள்ளிட்ட வருகைத்தந்திருந்த சிறப்பு விருந்தினர்களினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

வணக்கத்திற்குரிய மஹாசங்கத்தினர் உள்ளிட்ட இரத்தினபுரி மறைமாவட்டத்தின் ஆயர் வணக்கத்திற்குரிய க்ளீடஸ் சந்திரசிறி பெரேரா, இரத்தினபுரி மாவட்ட அனுநாயக்கர் டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

அரச நத்தார் விழாவில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் நத்தார் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் நத்தார் தினத்தை முன்னிட்டு அரச நத்தார் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, மன்னார், குருநாகல் ஆகிய மறைமாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டுகளில் நாம் அரச நத்தார் விழாவை கொண்டாடியிருந்தோம். இம்முறை புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெறுகிறது. இது குறிப்பாக கேகாலை கிறிஸ்தவ மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவே நான் பார்க்கின்றேன்.

கேகாலை புனித மரியாள் தேவாலயம் ஏறக்குறைய 170 வருட வரலாற்றைக் கொண்ட புராதன தேவாலயம் என்பதை நாம் அறிவோம். இந்த தேவாலயத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, பௌத்தர்களும் பிற மதத்தவர்களும் வருகை தருகின்றனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இந்த தேவாலயத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த எமது சகோதர, சகோதரிகளை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற விசேட ஆராதனையில் பௌத்த பிக்குகளும் கலந்துகொண்டிருந்தமை எனக்கு நினைவிருக்கிறது. அதுமட்டுமின்றி, அந்தப் பிக்குமார் விளக்கு ஏற்றி அன்றைய தினம் இறந்த சக மக்களை நினைவு கூர்ந்தனர். எனவே, இந்த தேவாலயம் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் தேவாலயமாகும்.

அரச நத்தார் விழாவை இப்பிரதேசத்தில் நடத்துவதுடன் அதனைச் சுற்றியுள்ள தேவாலயங்களை அபிவிருத்தி செய்யவும், அறநெறி பாடசாலைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்வோம்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியிலும், பிரதமர் என்ற ரீதியிலும் அனைத்து மதத்தினருக்கும் உரிய வழிபாட்டுத் தலங்களின் அபிவிருத்திக்கு நான் முன்னுரிமை அளித்துள்ளேன்.

சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கும் வழியை மதம் கற்றுத் தருகிறது. எல்லா மதங்களும் நல்ல வாழ்க்கையை வாழவே போதிக்கின்றன. மற்றபடி வெறுப்பையும் கோபத்தையும் பரப்புவதற்காக அல்ல.

‘அறியாது பாவம் செய்யும் மக்களை மன்னியுங்கள்’ என்றே இறுதி தருணத்திலும் இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காமல் உலகிற்கு அற்புதமான பாடம் புகட்டினார்.

எனவே, சமாதானத்தின் இளவரசர் என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அரச நத்தார் விழாவை ‘மனிதகுலத்தின் அன்பின் அடையாளம் நத்தார்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடுவது காலத்திற்கு உகந்தது என்று நான் நம்புகிறேன்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கும் பாதுகாப்பதற்கும், அத்துடன் நாட்டிலுள்ள ஏனைய மதங்களுக்கு அரச அனுசரணை மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அது வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் நிரூபித்துள்ளோம்.

எந்தவொரு சமூகத்திலும் ஒழுக்கத்தைப் பேணுவதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு சமூகத்தில் சமய ஒழுக்கம் குறைவதே காரணம் என்பதை நாம் அறிவோம். சமுதாயத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல மதத் தலைவர்களின் சரியான வழிகாட்டுதல் இன்று நமக்குத் தேவைப்படுகிறது.

அடித்து, பேசி ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. சட்டங்களை விதித்து சிறைகளில் அடைப்பதன் மூலம் ஒரு சமூகம் உருவாகாது. விழுமியங்களையும் சமய நற்பண்புகளையும் வளர்த்து ஒட்டுமொத்த சமுதாயமும் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மதம் சார்ந்த சமுதாயத்தின் மூலம் சமுதாயத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். விழுமியங்கள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இலக்கை அடைய நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்! என கௌரவ பிரதமர் கூறினார்.

கௌரவ பிரதமருடன் கௌரவ இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த அவர்களும் அலரி மாளிகையிலிருந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, தாரக பாலசூரிய, கனக ஹேரத், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகாந்த குணதிலக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன், கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, கேகாலை நகர மேயர் ஜீ.கே.சமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment