Politics | அரசியல் உள்நாடு 

தோட்ட வீடமைப்பு அமைச்சினால் 7,000 லட்சம் ரூபா நிதி ஒதுக்கம்….

“தோட்ட வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க 7,000 லட்சம் ரூபா இந்த அமைச்சின் ஊடாக செலவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் நினைத்திருந்தால் புதிய 700 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கலாம்” என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

புனர் நிர்மாண பணிகளுக்காக ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார், கொட்டகலை முத்து விநாயகர், பூண்டுலோயா வட்டகொட உள்ளிட்ட நான்கு ஆலயங்களுக்கு நிதி வழங்குவதற்காக கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இன்று (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் நாட்டில் பொருளாதார நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தாலும் அபிவிருத்தி பணிகளை நாங்கள் முன்னெடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம். இந்த ஆலயம் புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஹட்டன் டிக்கோயா நகர சபைத்தலைவர் பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த காலங்களில் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நிதி உதவியினை பெற்றுக்கொடுத்தார்.

நாங்கள் எதிர்கட்சியில் இருக்கின்ற போதிலும் ஆலய நிர்வாக சபை கேட்ட உடனேயே அதனை செய்து கொடுத்தார். நேற்றும் இன்றும் மாத்திரம் சுமார் 250 லட்சம் ரூபாய்களை பெற்றுக் கொடுத்துள்ளோம். அதே போன்று உங்களுக்கு தெரியும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ அவர்களும் இந்திய உதவி தூதுவர் கோபால் பாக்லே அவர்களும் நேற்று வந்திருந்தார்கள்.

இதன் போது இந்திய அரசாங்கத்தினால் கட்டப்பட்ட ஆயிரம் வீடுகள் மக்கள் பயனாளிகளுக்காக கையளிக்கப்பட்டன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மக்களுக்கு சேவையாற்றும் போது தோட்டம் நகரம் என்று பிரித்து பார்க்கவில்லை. இது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் சரி இப்போதும் சரி மக்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரத்தில் பெற்றுக் கொடுத்துள்ளது இன்றைய தலைவர் ஜீவன் தொண்டமான் அவர்களும் அதனையே செய்து வருகிறார்.

இந்திய அரசாங்கம் ஒன்பதரை லட்சம் ரூபா ஒரு வீட்டுக்காக பெற்றுகொடுத்திருக்கிறது. இதன் உட்கட்டமைப்பு வசதிகளை நாங்களே செய்து கொடுக்க வேண்டும். ஹட்டன் ஆலயத்திற்கு 10 மில்லியன் ரூபா இன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் பத்து ஆலயங்களுக்கு பெற்றுக்கொடுத்தால் நூறு பேர் எம்முடன் இருப்பார்கள் ஆனால் நாங்கள் அப்படி எதிர்ப்பார்க்கவில்லை. மக்கள் எதனை எதிர்ப்பார்கிறார்களோ அதனையே நாங்கள் செய்து வருகிறோம்.

ஒரு கோடி ரூபா தேவையான விடயத்திற்கு ஒரு லட்சம் ரூபா பெற்றுக்கொடுத்தால் அந்த வேலை நிறைவு பெறாது. அமைச்சரை பொறுத்த வரையில் முழுமையாக என்ன செய்ய வேண்டுமோ அதனையே அவர் செய்வார். ஆகவே தான் பெருந்தொகை நிதியினை இந்த ஆலயத்திற்கு பெற்றுக் கொடுத்துள்ளார் இந்த ஆலயத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெற வேண்டும்.

ஏனையவர்களை போன்று அந்த கோயிலுக்கு 10 லட்சம், இந்த கோயிலுக்கு 10 லட்சம் என்று பெற்றுக்கொடுக்கும் பழக்கம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குமில்லை. இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்குமில்லை. ஹட்டனை பொறுத்தவரையில் நாங்கள் அரசியலுக்காக நிதிகளை பெற்றுக்கொடுக்கவில்லை. ஆகவே பெருவாரியான நிதி வரும் போது நீங்களும் எங்களுடன் இருந்து அதனை பெற்றுக்கொள்ள வேண்டும்.” என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார், சத்திவேல், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் பாலசந்திரன் உட்பட ஆலய பரிபாலன சபையினர். கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment