Latest | சமீபத்தியது உள்நாடு 

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான கூட்டு ஊடகவியலாளர் மாநாடு……

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளிநாட்டு அமைச்சும் ஜப்பான் தூதரகமும் இணைந்து 2022 ஜனவரி 19ஆந் திகதி சசகாவ நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. மொஹான் சமரநாயக்க, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோனல குணவர்தன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன உட்பட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கூட்டு செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக, 2022ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நினைவு நிகழ்வுகள் மற்றும் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு ஒரு வெளிச்செல்லும் திட்டத்தை உள்ளடக்கிய செயற்றிட்டம் ஆகியன குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பங்குதாரர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதனடிப்படையில், ஜப்பானிய மற்றும் இலங்கையின் சமூக – கலாச்சார உறவுகளை முன்னிலைப்படுத்தும் நான்கு (04) பிராந்திய நிகழ்ச்சிகள் ஹம்பாந்தோட்டை, கேகாலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்படும்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நாடளாவிய ரீதியில் கட்டுரை (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஓவியம் மற்றும் குறும்படக் காணொளிப் போட்டிகளை ஏற்பாடு செய்யவுள்ளன. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளையும், பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் இருதரப்பு உறவையும் நிரூபிக்கும்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தனது கருத்துக்களில், இலங்கையின் பாரம்பரிய நண்பர் என்ற வகையில், தேவைகளுக்கு ஏற்ப ஜப்பான் எப்போதும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த சில வருடங்களில் அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் உட்பட பல துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்துவதில் இரு தரப்பும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், துடிப்பான அபிவிருத்திக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் அதை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவின் புத்தாண்டு தின செய்தியைக் குறிப்பிட்ட தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, ‘முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச சமூகத்திற்குத் திரும்புவதற்கு ஆதரவை வழங்கியமையையும், 2011 இல் ஏற்பட்ட பெரும் கிழக்கு ஜப்பான் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இலங்கை ஜப்பானுக்கு நல்கிய அன்பான உதவிகளையும் ஜப்பான் எப்போதும் நினைவில் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டார். ‘எமது நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதே சமயம் மக்களிடையே பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், அதிகரித்த எமது ஆற்றல்களை ஆராய்வதற்குமான’ தனது உறுதிப்பாட்டை தூதுவர் மிசுகோஷி மேலும் புதுப்பித்தார்.

நிறைவுரையை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு கிராமப்புறங்களில் உள்ள உள்ளூர் சமூகத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியை முன்னெடுப்பது பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் இதுவே முதல் தடவை எனக் குறிப்பிட்டார். கடந்த எழுபது வருடங்களாக பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பகிரப்பட்ட மதிப்புக்களின் மூலம் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த அடிப்படை மதிப்புக்கள் பெருகிய முறையில் நெருங்கிய உறவின் அடித்தளத்தை உருவாக்கியுள்ள அதே வேளை, இரு நாடுகளும் இந்த வரலாற்று ஆண்டு விழாவை அதன் முக்கியத்துவம் மற்றும் இரு நாட்டு மக்களினதும் பொதுவான அபிலாஷைகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுகூருவது குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபடும் என மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அமைச்சு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம்
கொழும்பு
2022 ஜனவரி 20

Related posts

Leave a Comment