Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் மலையக மக்கள் புறக்கணிப்பு – வடிவேல் சுரேஷ் எம்.பி

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் மலையக மக்கள் தொடர்பில் எதுவும் கூறாது அவர்கள் புறக்கணிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளார், மலையக மக்களாகிய நாங்கள் விமோசனங்களை எதிர்பார்த்திருந்தோம் ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவித்ததானது,

ஜனாதிபதியின் கொள்கை உரையில் மலையக மக்களாகிய நாங்கள் விமோசனங்களை எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது புஷ்வானமான நிகழ்வாகவே அதனை காண்கின்றோம். நாட்டின் பொருளாதார பிரச்சனை, மலைய மக்களின் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதை நாங்கள் வரவேற்கின்ற அதேநேரத்தில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் இது தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை.

இதுவரையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ, அமைச்சர்களோ உத்தரவிடவும் இல்லை. ஆகவே முழுமையாக எங்களின் அதிருப்தியை கூறிக்கொள்கின்றோம். அவர்களும் இந்த நாட்டின் பிரஜைகளே. மலையக மக்கள் தொடர்பில் அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்திருக்க வேண்டும். இந்த மக்கள் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

இந்திய அரசாங்கத்தினால் அமைத்துக்கொடுத்த வீடமைப்புத் திட்டத்தை காட்டி அபிவிருத்தி என்று கூற முடியாது. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற ரீதியில் இந்த நாட்டின் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் எவ்வாறான அபிவிருத்திகள் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப் போகின்றார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதேவேளை பெருந்தோட்டக் கம்பனிகளினால் எமது மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கம்பனிகளுடன் பங்குதாரர்களாக இருக்கின்றனர். ஆகவே தேசிய கொள்கையில் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related posts

Leave a Comment