உள்நாடு 

சர்ச்சைக்குரிய இராஜகிரிய வாகன விபத்து : சம்பிக்க உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் சாட்சி

இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றினை மையப்படுத்தி முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதி திலும் குமார ஆகியோருக்கு எதிரக தொடரப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (21) அறிவித்தது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டது. வழக்கானது விசாரணைக்கு வந்த போது குற்றம் சட்டப்பட்டுள்ள 3 பிரதிவாதிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது, முதல் பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதமை தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை, சட்டமா அதிபரால் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

10 பரிசோதனைகளின் அடிப்படையில், பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் உடல் நிலை சாதாரணமாகவே உள்ளதென மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்த சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில், நீதிமன்ற செயற்பாடுகளை தாமதிப்பதற்காக முதல் பிரதிவாதி வேண்டுமென்றே செயற்பட்டுள்ளமை தெரியவருவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டதுடன், விரைவில் வழக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்கு திகதியொன்றை அறிவிக்குமாறும் கோரினார்.

திடீர் சுகயீனத்தினால் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பல்வேறு பரிசோதனைகளை எடுக்க நேரிட்டதாகவும் நீதிமன்ற செயற்பாடுகளை தாமதிப்பதற்காக செயற்படவில்லை எனவும் பிரதிவாதி பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார். இந் நிலையிலேயே, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 18 மற்றும் 23 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

தகவல் – எம்.எப்.எம்.பஸீர்

Related posts

Leave a Comment