உள்நாடு 

பொரளை தேவாலய குண்டு சம்பவம் : கைதான வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டம்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகே, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

75 வயதான குறித்த வைத்தியர், பொலிஸ் விசாரணைகளின் போது வழங்கிய வாக்கு மூலத்தை ஆராயும் போது, அவர் மானசீக பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளமை தெளிவாவதாகவும் அதனால் அவரை இவ்வாறு மன நல மருத்துவர் ஒருவர் முன் ஆஜர் செய்து, அறிக்கை பெற எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் எதிர்வரும் செவ்வாய் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதனைவிட சாட்சியாக கருதப்படும் 13 வயது சிறுவன் ஒருவனும், சந்தேக நபர்களில் ஒருவரும் குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாய்த்தின் கீழ் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலமும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 11 ஆம் திகதி பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலய’ வளாகத்தில் குண்டு மீட்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் 29, 25, 41, 55 வயதுகளை உடைய, தெமட்டகொடை மாலிம்பட மற்றும் மருதானை பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். பொரளை பொலிஸாரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும் அக்கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் பின்னர் விசாரணைகள் தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும், விசாரணைகளின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டியும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஊடக சந்திப்பொன்றினை நடாத்தி சி.சி.ரி.வி. ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே எம்பிலிபிட்டிய – பணாமுர பகுதியில் வைத்து 65 வயதான சந்தேக நபர் (இரகசிய வாக்கு மூலம் வழங்கியவர்) கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கடந்த 17 ஆம் திகதி இரவு, ஓய்வுபெற்ற வைத்தியர் ஹேரத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரே 65 வயதான தனது சகாவுக்கு கைக்குண்டினை கொடுத்து தேவாலயத்தில் வெடிக்க வைக்கச் சொன்னதாக பொலிஸ் தரப்பு கூறியது.

இவ்வாறான நிலையில், குறித்த வைத்தியர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்ட கொழும்பு தெற்கு வலய குற்ற விசாரணைப் பிரிவினரால், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியரிடம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய எனக் கூறி, அம்பாந்தோட்டை – ரன்ன பகுதிக்கு சென்றிருந்த சிறப்பு பொலிஸ் குழு, ருவன் என அறியப்படும் துறைமுக அதிகார சபைக்கு உட்பட்டு சேவையாற்றும் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படும் கே. ஆர். பிரேமசந்ரவை கைது செய்திருந்தனர். அவரே வைத்தியருக்கு கைக்குண்டினை அளித்தவர் என விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சந்தேக நபரிடமும் தீவிர விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் வைத்தியர் பொலிஸாரிடம் இந்த குண்டு விவகாரத்தின் பின்னணியில் தானே உள்ளதாக ஒப்புக்கொண்டதாக, விசாரணைகளை முன்னெடுக்கும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளனர்.

அத்துடன் பொரளை தேவாலய குண்டு விவகாரத்துக்கு மேலதிகமாக, கடந்த 2021 செப்டம்பர் மாதம் பதிவான நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு விவகாரம், அதனை தொடர்ந்து பெல்லன்வில விகாரைக்கு அருகே கைக்குண்டு மீட்கப்பட்ட விடயங்களின் பின்னணியிலும் இந்த வைத்தியரே இருப்பதாக அந்த தகவல்கள் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வைத்தியரின் மனைவி அண்மையில் கொவிட் தொற்றால் உயிரிழந்திருந்தார். கொவிட் தொற்றுக்கு உள்ளான அவரை கொம்பனித் தெரு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் முதலில் சேர்க்க முற்பட்ட போது சாத்தியப்படவில்லை எனவும், பின்னர் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சையளித்ததாகவும் இதன்போதே அவர் உயிரிழந்ததாகவும் வைத்தியர் தனது வாக்கு மூலத்தில் கூறியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனது மனைவிக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலையை பிரபலப்படுத்தும் நோக்கில் அங்கு குண்டு வைத்ததாக வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸ் தரப்பு தகவல்களை கசியவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் விசாரணையுடன் தொடர்புடைய, பொரளை தேவாலயத்தில் குண்டு வைக்க காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியதாக பொலிஸ் தரப்பு ஊடகங்களுக்கு தகவலளித்துள்ளது. அதன்படி, பொரளை – ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் தனது திருமணம் நடந்ததாகவும், பெளத்த பெண் ஒருவரை மணந்த தனக்கு அப்போது தேவாலயத்தில் காலை நேர வைபவம் ஒன்றினை முன்னெடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் , மனைவி மீதுள்ள அளவு கடந்த பிரியத்தால் அச்சம்பவத்தை மையப்படுத்தி குண்டு வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே வைத்தியரை மன நல பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

தகவல் – எம்.எப்.எம்.பஸீர்

Related posts

Leave a Comment