Latest | சமீபத்தியது Sport | விளையாட்டு 

வருடத்தின் அதிசிறந்த ICC சர்வதேச T20 கிரிக்கெட் வீரர் ரிஸ்வான், வீராங்கனை போமன்ட்….

வருடத்தின் அதிசிறந்த ICC சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானின் மொஹமத் ரிஸ்வான்,, அதிசிறந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட் ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

2021க்கான சர்வதேச கிரிக்கெட் விருதுகளை ICC இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அறிவித்தது. மொஹமத் ரிஸ்வான் 2021ஆம் ஆண்டில் 29 போட்டிகளில் பங்குபற்றி ஒரு சதம், 12 அரைச் சதங்கள் அடங்கலாக மொத்தம் 1,326 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அவரது சராசரி 73.66 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 134.89ஆகவும் அமைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாரோ அதேபோன்று விக்கெட்காப்பாளராகவும் ரிஸ்வான் அபார ஆற்றல்களை வெளிப்படத்தியிருந்தார். விக்கெட் காப்பாளாராக 20 பிடிகள், 2 ஸ்டம்ப்கள் அடங்கலாக 22 ஆட்டமிழப்புகளில் பங்களிப்பு செய்திருந்தார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக லாகூரில் கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வான் தனது கன்னி சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக இங்கிலாந்தின் டெமி போமன்ட் தெரிவானார்.

கடந்த வருடம் 9 மகளிர் சர்வதேச இருபது 20 போட்டிகளில் 3 அரைச் சதங்கள் அடங்கலாக 303 ஓட்டங்களை போமன்ட் பெற்றிருந்தார். இங்கிலாந்து சார்பாக அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற போமன்ட், ஒட்டுமொத்த நிலையில் 3ஆம் இடத்தில் இருந்தார்.

இணை உறுப்பு நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த வீரராக ஓமான் சகலதுறை வீரர் ஸீஷான் மக்சூத் தெரிவானார். இவர் 2021இல் 13 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 31.60 என்ற சராசரியுடன் 316 ஓட்டங்களைக் குவித்ததுள்ளதுடன் 18.80 என்ற சராசரியுடன் 21 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இணை உறுப்பு நாடுகளுக்கான வருடத்தின் அதிசிறந்த சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வீராங்கனையாக ஒஸ்ட்ரியா வீராங்கனை அண்ட்றியா மாய் ஸெப்பீடா தெரிவானார். இவர் கடந்த வருடம் 8 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 51.57 என்ற சராசரியுடனும் 102.55 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடனும் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கலாக 361 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

Related posts

Leave a Comment