வருடத்திற்கு தேவையான 50,000 மெற்றிக் தொன் எரிபொருளை நேரடியாக பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் பேச்சுவார்த்தை……
இலங்கை மின்சார சபைக்கு ஒரு வருடத்திற்கு தேவையான எரிபொருளை நேரடியாக ஐ.ஒ.சி நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை மின்சாரசபை இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மின்சாரசபை அதிகாரிகளுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சாரசபை தெரிவிக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மின்சார சபை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தியாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை கடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ள இலங்கை மின்சார சபை முயற்சிகளை எடுப்பதுடன், அதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒரு வருடத்திற்கு தேவையான 50 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை குறுகியகால கடன் அடிப்படையில் ஐ.ஒ.சி நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ள இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்படுகின்ற நிலையில், அதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொடவிற்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.