Sport | விளையாட்டு 

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி….

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதி காண் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி சம்பியனானதன் மூலம் இவ்வருடம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் பொதுநலவாய விளையாட்டு விழா இவ்வருடம் ஜூலை 28 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து, இந்தியா,பாகிஸ்தான், அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன ஐ.சி.சி. டி20 தர வரிசையின்படி நேரடித் தகுதியை பெற்றுக்கொண்டன.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று மலேஷியாவில் நடைபெற்று வந்த பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான தகுதிகாண் போட்டித் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இலங்கை, பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, கென்யா, மலேஷியா ஆகியவற்றின் மகளிர் கிரிக்கெட் அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தன. லீக் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்ட இப்போட்டியில் இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றியீட்டி பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றது.

இன்று காலை ஆரம்பமான லீக் தொடரின் கடைசிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் மோதியிருந்தன. இவ்விரு அணிகளும் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியிருந்தமையால் இப்போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமைந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சாமரி அத்தபத்து 28 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசினார்.

137 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 22 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. பந்துவீச்சிலும் சாமரி அத்தப்பத்து 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார்.

இதேவேளை, கரீபியத் தீவுகளுக்கிடையில் நடைபெற்ற தகுதிகாண் தொடரில் வெற்றியீட்டிய பார்படோஸ் மகளிர் அணி இந்தியா,பாகிஸ்தான், அவுஸ்திரேலியாவுடன் குழு ஏயில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டித் தொடரில் சிறப்பாக செயற்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவி சாமரி அத்தப்பத்து 4 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடி 2 அரைச் சதங்களுடன் 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், 2 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த‍மை விசேட அம்சமாகும்.

தகவல் – எம்.எம்.சில்வெஸ்டர்

Related posts

Leave a Comment