தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 3300 மில்லியன் பெறுமதியான 330 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள்….
இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையை இன்று (25) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தும் “ஹரக்கடா” என்பவரால் குறித்த ஹெரோயின் தொகை அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினார்.
குறித்த போதைப்பொருள் கடத்தலுக்கு மேலும் மூவரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
330 கிலோ கிராமுக்கும் அதிக ஹெரோயின் தொகையுடன் பயணித்த 02 படகுகளை தெற்கு கடற்பிராந்தியத்தின் சர்வதேச கடல் எல்லைக்கருகில் நேற்று (24) கைப்பற்றியதாக கடற்படை பேச்சாளர், கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார். அந்த படகுகளிலிருந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை – குடாவெல்ல பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவ படகுகளே இவ்வாறு போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையின் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களுடன் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.