Politics | அரசியல் 

அரசாங்கத்துக்கு பாராட்டுகள் ; ஆனாலும் அவதானித்துக் கொண்டு இருப்போம்

அமைச்சரவைப் பத்திரம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் தெரிவிப்பு -தோட்ட சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரத்தை வரவேற்கிறோம். அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து விடுவதனால் மாத்திரம் திட்டங்கள் நிறைவேறிவிடுவதில்லை. அதற்கப்பால் சென்று அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே மக்களுக்கு அதன் பயன் கிடைக்கும். பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டு, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டப் பின்னரும் கூட நுவரெலிய மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை நடைமுறைப்படுத்தும்போது காட்டப்படும் பாரபட்சத்தை நாம் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறோம். எனவே தோட்ட சுகாதார முறைமை தேசிய சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரத்தை வரவேற்பதோடு அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதை தொடர்ச்சியாக அவதானித்து வருவோம். பிரதேச செயலக விடயத்தில் காட்டப்படுவதுபோன்று சுகாதார விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுமிடத்து அதற்காகவும் மலையகம் முழுவதும் மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவே உள்ளோம் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.தோட்ட சுகாதார முறைமையை அரசாங்க சுகாதார முறைமைக்குள் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் அமைச்சரவைப் பத்திரம் குறித்து ஊடகங்களுக்கு அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தோட்ட வைத்திய முறைமையை தேசிய வைத்திய சேவையுடன் இணைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ‘பாராளுமன்ற ஆய்வறிக்கை’ ( Committee Report ) ஒன்றைத் தயாரித்து அதனை உத்தியோகபூர்வமாக 2020 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து ஆற்றிய உரையே எனது இறுதியான பாராளுமன்ற உரையாகும்.எனது இறுதி உரை என கூறி உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் என்னோடு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்கள் சக பாராளுமன்ற உறுப்பினர்கள்களுக்கு அந்த உரையில் நன்றி தெரிவித்தும் இருந்தேன் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று (25/01/2022) சுகாதார அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்து இருந்தார். அதற்கும் முதல்நாள் அழைப்பில் வந்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன எனது தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் என்னுடன் சிலாகித்துப் பேசி பாராட்டும் தெரிவித்து இருந்தார்.இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டுகிறோம். இதற்கு முன்னரும் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, 2018 ஆம் ஆண்டு ராஜித்த சேனாரத்ன ஆகியோரால் இதற்கான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஆனாலும் காரியம் ஆகவில்லை. எனவேதான் விரிவான ஆய்வறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து விடுவதனால் மாத்திரம் திட்டங்கள் நிறைவேறிவிடுவதில்லை. அதற்கப்பால் சென்று அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே மக்களுக்கு அதன் பயன் கிடைக்கும். பிரதேச செயலக விடயத்தில் காட்டப்படுவதுபோன்று சுகாதார விடயத்தில் பாரபட்சம் காட்டப்படுமிடத்து அதற்காகவும் மலையகம் முழுவதும் மக்களுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்து உள்ளார்.

Related posts

Leave a Comment