கொங்கோவில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் 26 பேர் பலி…
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள சந்தையொன்றில் மின் கேபிள் அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்ஷாசா அருகே புதன்கிழமையன்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயர் மின்னழுத்த கேபிள் அறுந்து வீடுகள் மற்றும் சந்தையில் கொள்வனவில் ஈடுபட்ட பொது மக்கள் மீது வீழ்ந்துள்ளது. மின் கேபிள் அறுந்து வீழ்ந்தமைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கின்ஷாசாவின் புறநகரில் உள்ள மடாடி-கிபாலா மாவட்டத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கொங்கோ பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண் சந்தை வியாபாரிகள் என்று அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.