Latest | சமீபத்தியது உள்நாடு 

“தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்…

இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (02) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், நிலையான மின் விநியோகம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் இந்த “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இரண்டு பெரிய பருவக் காற்றுகளையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்குக் கடற்கரைப் பிரதேசத்தில், 13 கிலோமீற்றர் நீளம் மற்றும் 150 ஹெக்டெயார் நிலப்பரப்பு, இதற்காகத் தெரிவு செய்யப்பட்டது. 90 மீற்றர் உயரத்திலான விசையாழிகளுடன் கூடிய முப்பது கோபுரங்களை இந்த மின்னுற்பத்தி நிலையம் கொண்டுள்ளது. சுழலும் கத்திகளின் (காற்றாலைகள்) விட்டம் நூற்று இருபத்து ஆறு மீற்றர் ஆகும். ஒரு கோபுரத்திலிருந்து 3.45 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நடுக்குடா பசுமை உதவி நிலையம் மற்றும் மன்னார் – புதுக்காமம் வரையான 36 கிலோமீற்றர் நீளத்துக்கு, இதன் ட்ரான்ஸ்மிஷன் கட்டமைப்பு அமைந்துள்ளது.

இந்நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்னுற்பத்தியின் அளவு 103.5 மெகாவொட்கள் ஆகும். இங்கு ஓர் அலகு மின்னுற்பத்தியை மேற்கொள்ள, 8 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகின்றது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மிகச் சிறந்த மின் விநியோகத்துக்காக, விசேட தொழில்நுட்ப முறைமைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்புணர்வுடன் கூடிய இந்நாட்டின் மிகப் பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையமான இது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுவை நோக்கிச் செல்லும் பயணத்தின் விசேடத்துவமிக்க மைல் கல்லாக விளங்குகின்றது.

“தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, மேலும் 50 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு இதுவரையில் தேசிய மின் கட்டமைப்புக்கு இணைக்கப்படும் மின்சாரத்தின் அளவு 248 மெகாவொட்களாகும். குறுகிய காலத்துக்குள் அந்தளவை மேம்படுத்துவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பில் கண்டறியும் நோக்கத்தில் இந்த மின்னுற்பத்தி நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அதிலுள்ள அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டார்.

2030ஆம் ஆண்டாகும் போது, இந்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற வகையில், குறைந்த விலையில் மின்னுற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணத்தின் அளவைக் குறைப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இராஜாங்க அமைச்சின் செயலாளர் கே.எச்.டீ.கே.சரகோன், மின்சார சபையின் உபதலைவர் நலிந்த இளங்ககோன், பதில் பொது முகாமையாளர் ரொஹாந்த அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் பலரும், இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

Related posts

Leave a Comment