Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

திறமையற்ற ஆட்சியாளர்களால் நாடு மீண்டும் சுதந்திரத்தை இழக்கிறது – ருவன் விஜேவர்தன

நாட்டில் டொலர் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், அரசாங்கம் பிரம்மாண்டமாக சுதந்திர தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும், திறமையற்ற ஆட்சியாளர்களால் நாடு மீண்டும் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை ( 2 ) இளம் செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்து மக்களின் பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் மிகவும் உற்சாகமாக சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரம், எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகள் பாரியளவில் தலைதூக்கியுள்ள இந்நிலையில் மக்களின் வீணடித்து விமான கண்காட்சிகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது. ஒருவேளை உணவு உட்கொண்டால் அடுத்த வேளைக்கு உணவு இருக்குமா என்று மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள போதிலும் , மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. பொருட்களின் விலைகள் குறைவடைந்தால் அதன் பயனை அனைத்து மக்களும் அனுபவிப்பர். ஆனால் அரசாங்கம் பணத்தை அச்சிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கிக் கொண்டிருக்கிறது.

5000 ரூபாய் கொடுப்பனவை வழங்கி, பொருட்களின் விலைகளை அதிகரித்து 10,000 ரூபாவை அரசாங்கம் மீளப்பெறுகிறது. இதேபோன்று தொடர்ந்தும் பயணிக்க முடியாது. டொலர் நெருக்கடியும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணயநிதியத்தை நாடுவதே சிறந்ததாகும்.

மத்திய வங்கியில் டொலர் இல்லை. ஆனால் வெளிநாட்டு பணியாளர்கள் முறையற்ற வகையில் பணம் அனுப்புவது சிறந்தது என்று நிதி அமைச்சர் கூறுகின்றார். தனது உறவினர்களுக்கு இதன் மூலம் இலாபம் கிடைக்கப் பெறும் என்பதற்காகவே அவர் இவ்வாறு கூறுகின்றார். கருப்பு சந்தையின் விலைக்கே மத்திய வங்கி டொலருக்கான கொடுப்பனவை செலுத்துமெனில் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் டொலரை நாட்டுக்கு அனுப்புவர். அவ்வாறு செய்தால் மத்திய வங்கியில் டொலர் இருப்பு அதிகரிக்கும்.

ஆனால் நிதி அமைச்சர் அதனை செய்யாமல் கருப்பு சந்தையை மதிக்கின்றார். இதுவும் மத்திய வங்கிக்கு டொலர் கிடைக்கப் பெறாமைக்கான ஒரு காரணமாகும். இதே நிலைமை தொடர்ந்தால் நாடு வங்குரோத்து நிலைமையை அடையும். இவ்வாண்டு 6.5 பில்லியன் கடன் செலுத்த வேண்டியுள்ளது. மறுபுறம் டொலர் இன்மையால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் வளர்ச்சியடையும். ஆனால் அரசாங்கம் வழமை போன்று பணத்தை அச்சிட்டு அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.

டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக சீமெந்து, வாகன உதிரிப்பாகங்கள் என்பவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டில் 50 சதவீதத்தை விட அதிகமானோர் நெருக்கடிகளுக்கு உள்ளாகுவர். தற்போது அச்சுத்துறையும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அச்சு கடதாசிகளை இறக்குமதி செய்வதற்கு டொலர் வழங்கப்படாவிட்டால் பத்திரிகை மற்றும் பாடபுத்தகங்களைக் கூட அச்சிட முடியாத நிலைமை ஏற்படும்.

பாடப்புத்தகங்களை அச்சிட முடியாத நிலைமை ஏற்பட்டால் , ஏற்கனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி மேலும் பாதிப்படையும். அரசாங்கத்திற்கு இது தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை. மின் துண்டிப்பு விவகாரத்திலும் அரசாங்கம் ஸ்திரமான தீர்மானமின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது தரமற்ற எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றஞ்சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கம் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கு தாம் நினைத்ததை செய்வதற்கு கூட பணவசதியற்ற இந்த நாட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது? வெள்ளையர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றாலும் , திறமையற்ற ஆட்சியாளர்களால் நாடு மீண்டும் சுதந்திரத்தை இழந்து கொண்டிருக்கிறது.

பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பணவீக்கம் தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் எம்மால் சுதந்திரமாக சுதந்திர தினத்தைக் கொண்டாட முடியுமா? பெற்றோர் தமது பிள்ளைகளை எவ்வாறு துரிதமாக வெளிநாட்டுக்கு அனுப்புவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை இவ்வாறு சிந்திக்கும் அரசாங்கம் தள்ளிவிட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு முதலில் பொருளாதார சுதந்திரத்தை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Related posts

Leave a Comment