Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

சுயமரியாதை இருந்தால் மன்னிப்பு கோரவும் – நீதி அமைச்சரின் கூற்றால் எதிர்ப்பலை

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகாரக் கூற்றைக் கண்டித்துள்ள இலங்கையின் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென நீதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 27ஆம் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரி, இலத்திரனியல் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில், நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்குவது குறித்து முன்மொழிந்த நிலையில் இந்தக் இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் துறைமுகம், எண்ணெய்க் கூட்டுத்தாபனம், மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் வைத்தியத் துறைகளில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை சட்டப்பூர்வமாக இரத்துச் செய்ய வேண்டுமென நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக இதனை இரத்துச் செய்வது மிகவும் பொருத்தமானது எனவும், காவல்துறைக்கும் இராணுவத்திற்கும் இந்த உரிமை இல்லை என்பதே அவரது வாதமாகவும் அமைந்திருந்தது.

மக்களைப் புறக்கணிப்பது நியாயமற்றது எனவும், இந்தப் போராட்டங்களுக்குப் பின்னால் நாசகார சதிகள் இருக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார். துறைமுகங்கள், எரிபொருள் மற்றும் மின்சார சபையில் அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு அமைச்சர் சதித்திட்டங்களை குறிப்பிட்டதாக தொழிற்சங்க தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டை ஆட்சி செய்வதில் எவ்வித நோக்கமும் இல்லாதபோது, சரியான திட்டமிடல் மற்றும் இலக்குகளுடன் பொதுச் சேவையை பராமரிக்க முடியாதபோது, வீழ்ச்சி அடைந்து வரும் தேசிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்மொழிய முடியாத நிலையில் நீதியமைச்சர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Related posts

Leave a Comment