Latest | சமீபத்தியது உள்நாடு 

மின்சார பிரச்சினை காரணமாக இலங்கை மின்சாரசபைக்கு சுமார் 2000 மில்லியன் ரூபா மேலதிக செலவு…

நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் மின்சார பிரச்சினை காரணமாக இலங்கை மின்சாரசபைக்கு சுமார் இரண்டாயிரம் மில்லியன் ரூபா மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது. இந்த மேலதிக செலவு கடந்த டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து ஜனவரி ஆரம்பம் வரையிலாகும். எதிர்பார்த்த அளவைவிட அதிக டீசல் மற்றும் அனல் மின் நிலையங்களில் அதிக மின் உற்பத்தி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதே இதற்கு காரணமாகும் என இலங்கை மின்சார சபை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சாதாரணமாக ஒவ்வொரு வருடமும் முதல் 4 மாதங்களில் நீர் மின் உற்பத்தி குறைவடைந்து அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகளவில் மேற்கொள்னப்படுகின்றது. இருந்தபோதும் இம்முறை பிரச்சினை தீவிரமாவதற்கு காரணம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் செயலிழந்தமையாகும். அதன் பிரகாரம் சாதாரணமாக 3, 4 மணித்தியாலங்களில் செயற்பட்டு அதிக செலவு செய்யவேண்டி வந்த இலங்கை மின்சார சபை, இம்முறை 15 முதல் 18மணித்தியாலங்கள் செயற்படவேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் மின் தேவைப்பாடு குறைவான இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான காலத்துக்குள் இவ்வாறான மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதனாலே இலங்கை மின்சார சபைக்கு மேலதிக செலவை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று உராய்வு நீக்கி எண்ணெய்யை பயன்படுத்தி செயற்படும் சில மின் நிலையங்கள் டீசலை பயன்டுத்தி இருக்கின்றது.

மேலும் நிலக்கரி மின் நிலையம் இல்லாமை காரணமாக அதன் மின் உற்பத்தியை பூர்த்தி செய்து கொள்ள நீரை பயன்படுத்தியதனால், நீர் மின் நிலையங்களில் நீரின் அளவு தற்போது குறைவடைந்து செல்கின்றது. இதுதொடர்பாக மின்சாரவையின் ஊடக பேச்சாளர் என்ட்று நவமுனி குறிப்பிடுகையில்,

அனல் மின் நிலையம் மற்றும் டீசல் மின் நிலையங்கள் பாரியளவில் செயற்பட்டதால் இலங்கை மின்சார சபைக்கு மேலதி செலவொன்றை ஏற்றுக்கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து ஏற்பட்டுவந்த மின்சார பிரச்சிளை, இதுவரை முடிவடையவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே நாட்டில் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் சுமார் 45நிமிடங்கள் மின் துண்டிக்கப்பட்டிருந்தது. அடுத்து வரும் நாட்களிலும் மின் துண்டிப்பு ஏற்படுமா இல்லையா என உறுதியாக தெரிவிக்க முடியாது. மின் துண்டிப்பு மேற்கொள்வதாக இருந்தால் முன்கூட்டியே அதுதொடர்பாக அறிவிக்கப்படும் என்றார்.

Related posts

Leave a Comment