உள்நாடு 

இலங்கையில் 10 வயது சிறுவனை வீட்டில் வைத்து தொடர் பிரார்த்தனை: இறுதியில் நேர்ந்த விபரீதம் 

இலங்கையில் படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோரே கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அழுகிய நிலையில் காணப்பட்ட குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுவனது பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் சிறுவனை அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது.

அதேவேளை சிறுவனை பெற்றோர் அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை பிரார்த்தனைகளை நடத்தி வந்துள்ள நிலையிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதாகவும் அவரது பெற்றோர் தொடர்ந்தும் சமயப் பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.        

Related posts

Leave a Comment