Latest | சமீபத்தியது உள்நாடு 

4 ஆவது நாளாகவும் சுகாதாரத்துறையினரின் போராட்டம் தொடர்கிறது……

தாதியர்கள், நிறைவுகாண் மருத்துவ சேவைகள், மேலதிக வைத்திய சேவை உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தினால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவைகளுக்கு பெருமளவான வைத்தியசாலைகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமக்கான தீர்வுகள் துரிதமாக வழங்கப்படாவிட்டால் ஓரிரு தினங்களில் சகல சுகாதார ஊழியர்களையும் கொழும்பில் ஒன்றிணைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

மேலும் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகிக்கப்படாமையால் அரச ஒசுசலாவில் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சேவை, முழு நேர மற்றும் இடைக்கால சுகாதார சேவை என்பவற்றை உள்ளடக்கிய 18 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் சகல அரச வைத்தியசாலைகளிலும், அரச மருத்துவ நிறுவனங்களிலும் சகல மருத்துவ சேவைகளும் ஸ்தம்பித்துள்ளன. இதன் காரணமாக கிளினிக்குகள், இரசாயன பரிசோதனைகள், நோயாளர்களுக்கு மருந்து விநியோகித்தல், கதிரியக்க பரிசோதனைகள் (ஸ்கேன்), நோயாளர் விடுதிகளில் சிகிச்சையளித்தல், பொது சுகாதார பரிசோதகர்களின் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

Related posts

Leave a Comment