மருந்துக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்….
பதுளை பொது வைத்தியசாலையின் அரச மருந்தகத்தில் மருந்துகளை பெற்றுக்கொள்ள மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு மணிக்கணக்கில் வரிசையில் நின்ற போதிலும் மருந்தகத்தில் மருந்துகள் இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாக நோயாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் மஹியங்கனை, பசறை, லுனுகல, மடுல்சிம, மஹியங்கனை போன்ற தொலைதூரங்களிலிருந்து பதுளை பொது வைத்தியசாலையின் விசேட வைத்திய நிலையங்களுக்கு வருகை தந்துள்ளனர். அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து வந்த தாம் காலை உணவு கூட இல்லாமல் மருந்துக்காக காத்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் வைத்தியர்கள் விரைவாகப் பரிசோதித்து, மருந்துகளை எழுதி கொடுத்த போதிலும் பரிந்துரைக்கப்பட்ட மருந்தகளை இலவசமாகக் கொள்வனவு செய்ய மதிய உணவு கூட இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். பணம் செலுத்தி மருந்துகளைக் கொள்வனவு செய்ய வந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் மருந்துகளை பெற்றுக்கொள்ளும் நிலையில், இலவச மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வரும் நோயாளர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மணிக்கணக்கில் இவ்வாறு காத்திருந்தும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாமல் சில நோயாளர்கள் திரும்பிச் சென்றனர். இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக ஒரு நேரத்தில் 10 நோயாளர்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்படுவதாக மருந்தக அதிகாரிகள் தெரிவித்தனர்.