உள்நாடு 

அனுமதிக்கப்படாத அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து, ஒருவர் பலி…..

ஹொரணை – கொழும்பு வீதியில் கோரலகம பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹொரணை, கோனபால பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று காலை தனது வீட்டில் நடைபெறவிருந்த அன்னதான நிகழ்விற்காக ஒருவரை அழைத்து வருவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்ததில் முச்சக்கரவண்டி ஓட்டுனரின் தலையில் பலத்த அடி பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மதுரு ஓயா இராணுவ விசேட பயிற்சி பாடசாலையின் லெப்டினன்ட் என தெரியவந்துள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் எனவும் அது நாட்டில் ஓட்ட அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மேலும் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து லெப்டினன்ட்டை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பகுதி மக்கள் தலையிட்டு விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாவியை கழற்றி எடுத்ததால் அது தவிர்க்கப்பட்டது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரும் காயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

Leave a Comment