Latest | சமீபத்தியது உள்நாடு 

தொழிற்சங்க போராட்டத்தில் குதித்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகள்…

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விமானிகளின் ஒன்றியம் மீண்டும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தமது தொழில் சம்பந்தமான கோரிக்கைக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகம் நியாயமான தீர்வை வழங்க தவறியுள்ளதால், மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலுக்கு அமைய மாத்திரமே பயணங்களை மேற்கொள்ளவார்கள் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ள வருட மற்றும் ஏனைய விடுமுறைகளின் போது பணியில் ஈடுபடுவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விமான பயண தடவைகளை சரியாக செய்வதற்கு தேவையான விமானிகள் இல்லை. இதன் காரணமாக தமது ஒன்றியத்தின் உறுப்பினர்கள் விடுமுறை காலங்களிலும் எந்த தயக்கமும் இன்றி பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் தமக்கு மாதத்தில் வழங்கப்பட்டுள்ள பணி பட்டியலை மாற்றும் தேவை ஏற்படும் போது அதற்கு அனுமதியை வழங்கி, நிறுவனம் கூடிய உதவியை வழங்க வேண்டும்.

அத்துடன் தமது ஆபத்து மற்றும் குடும்பத்தினரின் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளாது, எந்த நாட்டுக்கும் சென்று எமது உறுப்பினர்கள், இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். தேசிய அவசியம் கருதியே கோவிட் காலத்திலும் இவ்வாறு அர்ப்பணிப்புடன் கடமையாற்றினோம். விமான பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் நிறுவனம் மாதாந்தம் பெறும் இலாபம் அதிகரிக்கும் நிலைமைக்கு வந்துள்ளது.

எனினும் தமது கோரிக்கைக்கு நியாயமான தீர்வை வழங்காததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், தமது விமானிகளுக்கு நியாயமான தீர்வை வழங்கும் வரை சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க உள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment