உள்நாடு 

வன்னியின் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முகமாக நடமாடும் சேவை!

வன்னியின் மூன்று மாவட்டங்களிலும் காணப்படும் காணி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான காணி அமைச்சின் நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்களின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் வன்னியின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், அவற்றிற்கு விரைவான தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன் அடிப்படையில் ஜனாதிபதி அவர்கள் காணி அமைச்சர் அவர்களுக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைபவாக, பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் எஸ். எம்.சந்திரசேன அவர்கள் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய நடமாடும் சேவை ஒன்றினை வவுனியாவில் இம்மாதம் 27 ம் திகதி நடாத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு பணித்துள்ளார்.

இதன் போது வன, வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களங்கள் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே வன்னி மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு இதன்போது தீர்வு காணப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment