Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

சம்பிக்க ரணவக்க – இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு……

நெருக்கடி நிலைமையில் இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும், தொடர்ந்தும் இந்தியாவின் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடி நிலைமைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் இலங்கைக்கு கிடைக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்கவிடம் கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான சம்பிக்க ரணவக்க நேற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கரு பரணவிதான மற்றும் படையணியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன், 43 ஆம் படையணியினால் அண்மையில் வெளியிடப்பட்ட ‘உயர்வோம் உயர்த்துவோம்” புத்தகமும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பின்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள், இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இந்தியா தற்போது இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தவறுகின்றது, அத்துடன் சகலரும் முகங்கொடுத்து வரும் கொவிட் நெருக்கடியும் இலங்கையை அதிகளவில் தாக்கியுள்ள காரணத்தினால் ஒட்டுமொத்தமான நாட்டின் பொருளாதாரத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதனை முறையாக கையாள சிறந்த வழிமுறைகள் காணப்படுவதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம் என்பது தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, இவ்வாறான நெருக்கடி நிலைமையில் இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும், தொடர்ந்தும் இந்தியாவின் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமது 43 ஆம் படையணியின் மூலமாகவும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்து நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ‘உயர்வோம் உயர்த்துவோம்’ புத்தக்கத்தில் இவற்றை தெளிவாக முன்வைத்துள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துக்களை முன்வைத்துள்ள இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ‘இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு நீண்டகாலமாக உள்ளதாகவும், இந்தியா மனப்பூர்வமாக இலங்கையுடன் நட்புறவை முன்னெடுத்து வருகின்றது எனவும் கூறியுள்ளதுடன், நெருக்கடி நிலைமைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் இலங்கைக்கு கிடைக்கும்’ என்பதையும் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment