ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு!
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.
‘தித்த’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்ந்த மாநாட்டு மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செயற்படுத்த வேண்டிய பொறிமுறைகளும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவற்றைக் கேட்டு கடிதங்களை அனுப்பிய போதும், தமது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை எனவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.