World | உலகம் 

பிரித்தானியாவை தாக்கியது யூனிஸ் புயல்! லண்டன் உள்ளிட்ட பகுதிகளின் தற்போதைய நிலவரம் – மூன்றாவது மரணம் பதிவானது

பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயண திட்டங்களை இரத்து செய்யுமாறும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மரத்தில் லொரி மோதியதில் 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலி

யூனிஸ் புயலின் போது இங்கிலாந்தில் மூன்றாவது மரணம் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹாம்ப்ஷயரின் ஆல்டனில், பழைய ஓடிஹாம் வீதியில் விழுந்த மரத்தில் லொரி மோதியதில், 20 வயதுடைய ஒருவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பெண் ஒருவர் பலி

புயல் காரணமாக வடக்கு லண்டனில் மரம் ஒன்று கார் மீது வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று பிற்பகல் வீசிய புயலின் போது, நெதர்டன், மெர்சிசைட் என்ற இடத்தில் வாகனத்தின் கண்ணாடியில் குப்பைகள் விழுந்ததில் 50 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் போக்குவரத்து பாதிப்பு

புயல் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதுடன், ரயில் பாதைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலங்கள் பல மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து விமான நிலையங்களில் புறப்பட வேண்டிய அல்லது தரையிறங்க வேண்டிய 430 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் ஏழு ரயில் இயக்குநர்கள் அனைத்து சேவைகளையும் நிறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் தென்கிழக்கு லண்டனில் உள்ள ஒவ்வொரு பாதையிலும் மரங்கள் வீழ்ந்துள்ளன. வேல்ஸிற்கான போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் நாளை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 200,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை

தற்போது நாடு முழுவதும் மொத்தம் 200,000 வீடுகளில் மின்சாரம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் செயலர் ஜார்ஜ் யூஸ்டிஸ் கூறுகையில், ஏற்கனவே 250,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகளை வழங்க குழுக்கள் கடுமையாக உழைத்து வருகின்றன.

புதுப்பிக்கப்பட்ட வானிலை எச்சரிக்கை

யூனிஸ் புயல் வட கடலை நோக்கிச் சென்றாலும், இங்கிலாந்தின் சில பகுதிகளில் வானிலை எச்சரிக்கைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 1 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை வரை உறைபனி வெப்பநிலை மற்றும் பனிக்கட்டி அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 2 மண்டலங்களுக்குள் இருப்பவர்கள் கடுமையான பனி மற்றும் பலத்த காற்றின் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை 3ன் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பலத்த காற்று மாலை வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இங்கிலாந்தின் தெற்கில் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் வலுவான காற்று காரணமாக இன்று மாலை வரை தற்போது அம்பர் எச்சரிக்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment