Latest | சமீபத்தியது உள்நாடு 

மைத்திரிக்கு எதிராக வழக்கு தொடருமாறு கோரும் கத்தோலிக்க திருச்சபை….

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக வழக்கொன்றை தொடருமாறு கத்தோலிக்க திருச்சபை,(Catholic Church) சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரையும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்குமாறும் கத்தோலிக்க திருச்சபை, சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கோரியுள்ளது.

அதேவேளை தாக்குதல் சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான தேசிய கத்தோலிக்க குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

தேசிய கத்தோலிக்க குழு அந்த அறிக்கையில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, சட்டமா அதிபர் திணைக்களம் தவறியுள்ளது.

இதனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலையாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தேசிய கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குற்றவியல் வழக்குகளை தொடருமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ள அனைத்து அதிகாரிகளும் முற்றாக விடுதலை செய்யப்படலாம் என்ற கவலை கத்தோலிக்க திருச்சபைக்குள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காது என்றால், சர்வதேசத்திற்கு செல்ல போவதாக கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த தாக்குதல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Leave a Comment