உள்நாடு 

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தாக்குதல் சம்பவம்; விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அழகுராணி

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி (Mrs SriLanka) புஷ்பிகா டி சில்வா பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம முன்னாள் திருமதி இலங்கை அழகுராணி புஷ்பிகாவுடன் நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தார் இதன்போது, அவர் திருமதி உலக அழகுராணி போட்டி மற்றும் அதில் பங்கேற்ற உள்ளூர் அமைப்பாளர்கள் தொடர்பான பல சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தினார்.

இந்த நேர்காணலைத் தொடர்ந்து, இலங்கையின் முதல் உலக திருமதி அழகுராணியான, ரோசி சேனநாயக்க, நேர்காணலின் போது தெரிவித்த கருத்துக்களால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி புஷ்பிகாவுக்கு எதிராக நட்டஈட்டு கடிதமொன்றை அனுப்பினார்.

அதன் மூலம் புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபாவை அவர் நட்டஈடாக கோரியிருந்தார். இந்தநிலையில், ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீடு தாக்கப்பட்டமை தொடர்பில், புஷ்பிகா டி சில்வாவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பிலியந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment