Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

தேவையேற்படின் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரண

சர்வதேச நாணய நிதியத்தை நாடப் போவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. தேவையேற்படின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி நாட்டிலுள்ள நிதி நெருக்கடிகள் தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டின் நிதி நிலைமைகள் தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் தொடர்ந்தும் அமைச்சரவையில் கருத்துக்கள் முன்வைக்கப்படும். எனினும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் விசேட அறிவித்தல் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (22) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இது தொடர்பில் அரசாங்கம் பரந்த நோக்கத்துடன் செயற்படுகிறது. கடந்த 50 ஆண்டு காலப்பகுதிக்குள் 29 சந்தர்ப்பங்களில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியுதவிகளைப் பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் ஆகக்கூடிய கடன் தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது.

எனவே சர்வதேச நாணய நிதியத்தை நாடப்போவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை. மாறாக அவர்களுடன் பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதிலும், சுற்றுலாத்துறையிலும் வருமானம் படிப்படியாக உயர்வடைந்து கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் ஓரிரு மாதங்களில் நெருக்கடி நிலைமை சுமூகமடையும் என்று எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக நாட்டில் ஏற்றுமதியை விட, இறக்குமதிகள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. எமது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும்.

எனினும் இறக்குமதி செலவு 20 பில்லியன் டொலரை விட அதிகமாகும். இரு மடங்கு அதிகமாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போதும், நாம் வெளிநாடுகளுக்கு அனுப்புபவற்றின் பெருமதி குறைவாகக் காணப்படும் போதும் இந்த நெருக்கடியை படிப்படியாகவே தீர்க்க வேண்டியேற்படும்.

எனவே உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன இறக்குமதி இடை நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அதனால் பெற்றுக் கொள்ளப்பட்ட நன்மை துரதிஷ்டவசமாக எரிபொருள் நெருக்கடியால் மக்களை சென்றடையவில்லை.

எனவே நிதி நெருக்கடிக்குக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி நிலைமைகள் தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக அமைச்சரவையில் தகவல்களை முன்வைப்பார். எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தொடர்பில் விசேட அறிவிப்பு எவையும் அவரால் முன்வைக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் தேவையேற்படின் சர்வதேச நாணயத்திடம் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Related posts

Leave a Comment