Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

நல்லாட்சி அரசாங்கத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் நோக்கத்திற்காக தவறான முறையில் செயற்படுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் சுதந்திர கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னெடுக்கும் கையெழுத்து போராட்டம் குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பயங்கரவாத தடைச்சட்டம் 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டு 1982 ஆம் ஆண்டு முழுமையான சட்டமாக அங்கிகரிக்கப்பட்டது. அப்போதைய சூழ்நிலையினை கருத்திற்கொண்டு தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது நடைமுறைக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட வேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவும் அல்லது அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அக்கறை கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பு என்று குறிப்பிட்டுக் கொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது.

நல்லாட்சி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்தம் செய்ய பொருத்தமான நடவடிக்கையினை முன்னெடுத்தது. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் பிற்போடப்பட்டது. அப்போதைய எதிர்கட்சியினர் குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை செயற்படுத்த இடமளிக்கவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் அரசியல் நோக்கத்திற்காகவும், அரசியல் பழிவாங்களுக்காகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துகிறது. சாதாரண குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை காணமுடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் அரசியல்வாதிகளும் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றார்.

Related posts

Leave a Comment