மின்வெட்டு நேர அட்டவணை….
இன்று(23), 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழு கூறியது.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஏனைய பகுதிகளில் 04 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

541 மெகாவாட் மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. டீசல் இன்மையால் கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் நேற்று(22) மாலை இடைநிறுத்தப்பட்டன. இதனிடையே, டீசல் இன்மையால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்றூ நவமனி குறிப்பிட்டார்.
இதேவேளை, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேவையான எரிபொருளை கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று (22) முதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். இதனூடாக இன்று (23) மின்னுற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அன்றூ நவமனி தெரிவித்துள்ளார்.