Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

ICCROM விருது வென்ற கலாநிதி காமினி விஜேசூரிய கௌரவிப்பு விழா -!

உரோமில் உள்ள கலாசார சொத்துக்களை பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைப்பதற்கான சர்வதேச மத்திய நிலையத்தினால் (ICCROM) வழங்கப்படும் உயரிய விருதைப் பெற்ற கலாநிதி காமினி விஜேசூரியவை கௌரவிக்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (22) அலரிமாளிகையில் இடம்பெற்றது.

புகழ்பெற்ற வாஸ்து நிபுணரும் தொல்பொருள் நிபுணருமான கலாநிதி காமினி விஜேசூரிய அவர்கள், 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச நிபுணர்களில் ஒருவராவார்.

கலாநிதி காமினி விஜேசூரிய அவர்களினால் அண்மையில் எழுதப்பட்ட சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட முக்கிய அறிக்கைகளை உள்ளடக்கிய ஐந்து நூல்களின் சிங்கள மொழியாக்கம் இதன்போது அவரினால் கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு ஆய்வுத்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 1969 முதல், இதுவரை 50க்கும் மேற்பட்ட ICCROM விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தெற்காசியா மூன்று விருதுகளை பெற்றுள்ளது. அதன்படி, இலங்கையர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

குருநாகல் அஸசெத்தும கிராமத்தில் பிறந்த கலாநிதி காமினி விஜேசூரிய அவர்கள், நாகொல்லாகொட மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு நாலந்தா கல்லூரியில் பாடசாலை கல்வியை பயின்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை மற்றும் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டயத்துடன் கட்டிடக்கலை நிபுணராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

கலாநிதி விஜேசூரிய அவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் யோர்க் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் / மரபுரிமை முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதுடன் அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் வரலாறு / பாதுகாப்பில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். ” பண்டைய இலங்கையில் தியான மடாலயங்கள்” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து அவர் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலங்கை கலாசார முக்கோணத்தின் முன்முயற்சி திட்ட முகாமையாளராக தொல்லியல் துறையில் பிரவேசித்த திரு. விஜேசூரிய அவர்கள், தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி ஆணையாளராகவும் (கட்டிடக்கலைஞர்) மற்றும் பணிப்பாளராகவும் (கட்டிடக்கலைப் பாதுகாப்பு) 18 வருடங்களாக தொல்லியல் திணைக்களத்திற்காக சேவையாற்றி, ICCROM இல் ஒரு உறுப்பினராக அதன் சேவையில் இணைந்த முதல் ஆசிய நிபுணராக இணைந்துக்கொண்டார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, இலங்கை கட்டிடக் கலைஞர்கள் நிறுவனத்தின் கட்டிடக் கலைஞர் ரசல் தன்தெனிய மற்றும் இலங்கை ICOMOS இன் பிரதித் தலைவர் கலாநிதி பி.டி.நந்ததேவ ஆகியோருக்கு இதன்போது கௌரவ பிரதமரினால் விருதுகள் வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்த, இத்தாலியின் தூதுவர் ரீட்டா ஜூலியானா மனெல்லா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தொல்பொருள் ஆய்வாளர் காமினி ரணசிங்க, இலங்கை ICOMOS நிறுவனத்தின் உப தலைவர் கலாநிதி B.D.நந்ததேவ, தொல்பொருள் திணைக்களத்தின் தொல்பொருள் மேலதிக பணிப்பாளர் பிரசன்ன பீ ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment